• 1 தலைவரின் சிந்தனை..
  பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.
 • 2 தலைவரின் சிந்தனை..
  அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரி;யும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.
 • 3 தலைவரின் சிந்தனை..
  போராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.
 • 4 தலைவரின் சிந்தனை..
  மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.
 • 5 தலைவரின் சிந்தனை..
  நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.
baner

Photo Gallery

ஈழத்துக்கானவை

மாவீரர் நாள் உரைகள் -எழுத்து

மாவீரர் நாள் உரை - 1999

தலைமைச் செயலகம், 
தமிழீழ விடுதலைப் புலிகள். 
தமிழீழம். 

27.11.1999

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழிழ மக்களே, இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள். தாயக விடுதலையை தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் சுதந்திர வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள்.

எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப்புதைத்தோம். வரலாற்றுத் தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.

எமது வீர விடுதலை வரலாற்றின் ஒரு முக்கிய திருப்பு முனையில் நின்றவாறு எமது மாவீரர்களை நாம் நினைவுகொள்கிறோம். எமக்கு முன்னால், கால விரிப்பில், ஒரு புது யுகம் எமக்காக காத்துநிற்கிறது. எமக்குப் பின்னால்

கடந்த காலத்தில், இரத்தம் தோய்ந்த விடுதலை வரலாறு நீண்டு செல்கிறது. மானிடத்தின் விடுதவைக்காக மாபெரும் தியாகங்கள் புரிந்த வரலாற்றுப் பெருமையுடன், எமது விடுதலை இயக்கம் பிறக்கப் போகும் புதுயுகத்தில் காலடி வைக்கிறது.

இப்புதுயுகம் எமக்குச் சொந்தமானது. அநீதியையும், அடக்குமுறையையும் எதிர்த்து, நீதிக்கும் சுதந்திரத்திற்குமாகப் போராடிய மக்களுக்குச் சொந்தமானது. இப்புதுயுகத்தில் எமது மக்களின் நெடுங்காலக் கனவு நிறைவுபெறும். இத்தனை காலமும் எமது மக்களைப் பீடித்த துன்பமும், துயரமும் அகன்று எமது மக்களுக்கு விடிவு பிறக்கும். எமது மண்ணுக்கு விடுதலை கிட்டும். எந்த இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் போராடி மடிந்தார்களோ, அந்தப் புனித இலட்சியம் இப்புதுயுகத்தில் நிறைவுபெறும். ஒப்பற்ற மாபெரும் இராணுவ வெற்றியின் சிகரத்தில் நின்றவாறு, இன்று நான் மாவீரர் நினைவுரையை நிகழ்த்துகிறேன்.

இந்த மகத்தான இராணுவ வெற்றி முழு உலகத்தையும் வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. இது ஒரு சாதாரண போரியல் சாதனையல்ல. போரியற்கலையில் ஒரு ஒப்பற்ற உலக சாதனையாகவே இவ்வெற்றி கருதப்படும். இந்த வெற்றியின் விஸ்வரூபப் பரிமாணம் கண்டு எமது எதிரி மட்டுமல்ல, எதிரிக்குப் பக்கபலமாக நின்று, பயிற்சியும், ஆயுதமும், பண உதவியும் வழங்கிவந்த உலக நாடுகளும் மலைத்துப் போய் நிற்கின்றன. ஷஓயாத அலைகள் மூன்றாக| க் குமுறிய இப்பெருஞ்சமர் ஒரு சில நாட்களில் இமாலய சாதனையைப் படைத்தது. முழுப்பலத்தையும் ஒன்று குவித்து, பெரும் படையெடுப்புக்களை நடத்தி, வருடங்களாக மாதங்களாக தொடர் சமர்களை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி கொடுத்து சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்த வன்னியின் வளமிகுபகுதிகளை எமது வீரர்கள் கடுகதி வேகத்தில் மீட்டெடுத்தனர் வன்னி மண்ணில் அகலக் காலூன்றிய எதிரி, தொடர்வலையமாக நிறுவிய படைத்தளங்களும் கட்டளைப்பீடங்களும், இரும்புக் கோட்டைகளாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்களும், மிகக்குறுகிய காலத்தில், மிகக்கூடிய வேகத்தில் புலிகளிடம் வீழ்ச்சியடைந்த ஆற்புதம், உலகத்தின் புருவத்தை உயர்த்தியது. வன்னியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழம்பெரும் பட்டினங்களிலிருந்து எதிரி இராணுவம் விரட்டப்பட்டது. அங்கெல்லாம் இப்பொழுது புலிக்கொடி மார்தட்டி பெருமையுடன் பறக்கிறது. காட்டுத் தீயாகப் பரவிய இப்பெருஞ்சமரில் எமது தாயகத்தின் இதய பூமியான மணலாற்றின் ஒரு பகுதி மீட்கப்பட்டதையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். காலம் காலமாகத் தமிழர் வாழ்ந்த இப்புனித மண்ணை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து, தமிழர்களை கொன்றழித்து, அங்கு சிங்களக் குடியேற்றங்களை நிறுவிய சோக வரலாற்றினை எமது மக்கள் நன்கறிவர்.

வடக்கையும் கிழக்கையும் புவியியல் ரீதியாக இணைத்து, வன்னியின் மிகச் செழிப்பான நிலங்களைக் கொண்ட எமது தேசத்தின் இதயபூமி மீண்டும் எமது கட்டுப்பாட்டில் வந்துகொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். இந்த மண்மீட்பு எமது போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தைக் சுட்டுகிறது. போரியற் கலையில் புலிப்படை வீரர்களின் அபாரமான வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் இந்த ஓயாத அலைகள் மூன்று| என்ற வன்னிப் பெரும் சமர் உலகத்திற்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறது. எமது படையணிகளின் சமரிடும் வேகமும் வீச்சும், குலையாத கூட்டுச் செயற்பாடும், துரித கெதியில் படை நகர்த்தும் ஆற்றலும், எதிர்த்துத்தாக்கும் உத்திகளும், அபாரமான துணிவும், நேர்த்தியான கட்டுப்பாடும் உலக இராணுவ நிபுணர்களை வியக்கச் செய்து வருகிறது. இந்த வரலாற்றுச் சமரில் களமாடி வீர சாதனை படைத்த சகல போராளிகளுக்கும், படைநகர்த்திய தளபதிகளுக்கும், இச்சமரில் பங்கு கொண்டு போராடிய எல்லைகாப்புப் படையினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்தப் பெருஞ்சமரில் எமது போராளிகளுக்கு ஊக்கமளித்து, உணவளித்து, இரத்தமளித்து, பின்கள வேலைகளில் உதவி புரிந்து பெரும் பங்காற்றிய தமிழீழ மக்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி. நில மீட்பிற்காகவே இந்தப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

தமிழீழம் எமக்குச் சொந்தமான நிலம். வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான நிலம். எமது வாழ்விற்கும், வளத்திற்கும் ஆதாரமான நிலம். நாம் பிறந்து, வாழ்ந்து, வளர்ந்த நிலம். எமது தேசிய அடையாளத்திற்கு அடித்தளமான நிலம் இந்த நிலத்தை தனது சொந்த நிலம் என்கிறான் எதிரி. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத்தீவில் சிங்கள இனவாதிகள் ஆட்சிபீடம் ஏறிய

காலத்திலிருந்து தமிழர் நிலம் விழுங்கப்பட்டு வருகிறது. தமிழர் நிலத்தை அபகரித்து சிங்கள மயமாக்குவது ஒரு புறமும், தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து, அதன் வளங்களை அழி;த்து, அங்கு வாழ்ந்த மக்களை அகதிகளாக்குவது இன்னொரு புறமுமாக, எமது நிலம் மீதுகொடுமை நிகழ்ந்து வருகிறது. இந்த அநீதிக்கு எதிராகவே நாம் போராடுகிறோம். ஆகவே, சாராம்சத்தில் எமது விடுதலைப்போரானது ஒரு மண்மீட்புப் போராகும். எமக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு, அந்த நிலத்தில் எமது ஆட்சியுரிமைiயை, இறைமையை நிலைநாட்ட நடைபெறும் போர்.

இந்தப் போரின் நோக்கம், குறிக்கோள் என்ன என்பதை எமது மக்கள் இப்பொழுது நன்கு உணரத்தொடங்கியுள்ளனர். சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் மக்களுக்கு சொந்த மண்ணின் மகிமை புரியும். அந்த மண்ணில் ஆக்கிரமிப்புக்காலூன்றி நிற்கும் அந்நியனை விரட்டவேண்டிய அவசியம் புரியும். இந்தப் புரிந்துணர்வால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாகவே இந்த மண்மீட்புப்போரில் எமது மக்கள் எமக்குப் பக்கபலமாக நின்று, பல்வேறு வழிகளில் பங்களித்து வருகிறார்கள். இன்று, எமது தேச விடுதலைப் போரானது விரிவடைந்து மக்கள் போராக வளர்ச்சியும்,எழுச்சியும் பெற்று வருகிறது.

எனது அன்பார்ந்த மக்களே,

ஆண்டுதோறும் எனது மாவீரர் நினைவுரையில் நான் சமாதானத்தையும், சமாதான வழியிலான அரசியற் தீர்வையும் வலியுறுத்தத் தவறவில்லை. அதேவேளை, சமாதானவழியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சிங்களப் பேரினவாதம் தயாராக இல்லை என்பதையும் நான் சுட்டிக்காட்டத் தவறவில்லை. சிங்களத்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி, மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிவரும் இரு பிரதான சிங்களக் கட்சிகளும், சாராம்சத்தில் இனவாதக் கட்சிகளே. இவ்விரு கட்சிகளும் சிங்கள-பௌத்த பேரினவாத சித்தாந்தத்தில் வேரூன்றி வளர்ந்தவை. அந்த வெறிபிடித்த, தமிழ் விரோதச் சித்தாந்தத்தில் திளைத்தவை. கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழினத்திற்கு எதிரான ஒடுக்குமுறையை முடுக்கிவிடுவதில் போட்டியிட்டு செயற்பட்டவை. இந்த இன ஒடுக்குதல் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தமிழருக்கு கொடுமை இழைத்த பெருமை சந்திரிகாவின் ஆட்சியையே சாரும். சந்திரிகாவின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் தமிழினத்திற்கு ஒரு சாபக்கேடாக அமைந்தது. தொடர்ச்சியான போரும், வன்முறையும், சாவும், அழிவும், பசியும் பட்டினியும், இடப்பெயர்வுமாக இக்காலகட்டத்தில் எமது மக்கள் எதிர்கொண்ட பேரவலம் மிகக்கொடுமையானது. இருண்ட, இரத்தம் படிந்த வரலாற்றுப் பக்கங்களைக் கொண்டதாக சந்திரிகாவின் அடக்குமுறை ஆட்சிக்காலம் நீண்டது. இந்தக்கொடிய ஆட்சியானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் என்றும் அழியாத வடுவை ஏற்படுத்தியது. உள்நாட்டில் தமிழருக்கு எதிராக ஒரு பயங்கரவாத ஆட்சியை நடத்திக்கொண்டு, வெளியுலகில் சமாதானம் விரும்பும் ஒரு சனநாயக தேவதையாக நாடகமாடினார் சந்திரிகா. தமிழர் தாயகத்தை முழுமையாக ஏப்பம்விடும் ஒரு நாசகாரப் போர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு, அதனை ஒரு சமாதானத்திற்கான போர் முயற்சியாக வர்ணித்தார். முழு உலகமும் அவரை நம்பியது. அவரது சமாதானப் போருக்கு ஆதரவு வழங்கியது. முழு உலகத்தையும் கண்கட்டி ஏமாற்றிய அரசியல் பரப்புரை வித்தைகளில் தமிழினத்துரோகிகளே சந்திரிகாவுக்கு பக்கத் துணையாக நின்றனர்.

நாம் சந்திரிகாவை நம்பவில்லை. தமிழரின் தேசிய பிரச்சினையை நீதியான முறையில் தீர்த்துவைக்கும் நேர்மையும், உறுதிப்பாடும் அவரிடம் இருக்கவில்லை. சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் நவயுகப் பிரதிநிதியாகவே நாம் அவரைக்கண்டோம். எனவேதான், நாம் சந்திரிகா அரசுடன் நேரடியாகப் பேச்சுக்களை நடத்த விரும்பவில்லை. ஆயினும் நாம் சமாதானக் கதவுகளை மூடிவிடவில்லை. சர்வதேச சமூகத்தின் முன்னிலையில், மூன்றாம் தரப்பு மத்தியத்துவத்துடன் சமாதானப்பேச்சுக்களில் பங்குகொள்ள நாம் தயாராக இருப்பதாக சென்ற ஆண்டு மாவீரர் நினைவுரையில் நான் கூறினேன். நாம் சர்வதேச மத்தியத்துவத்தை வேண்டியபோதும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏற்றதான சமாதானப் புறநிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினோம். போர் நெருக்கடி நீங்கிய நிலையில் இராணுவ ஆக்கிரமிப்பும், பொருளாதார நெருக்குவாரங்களும் அகன்ற ஒரு இயல்பான, நல்லெண்ண சூழ்நிலையில் பேச்சுக்கள் நடைபெறவேண்டும் என்பதை நாம் தெளிவாக விளக்கியிருக்கிறோம். சமாதானப் பேச்சுக்களுக்கு உகந்ததான ஒரு நல்லெண்ண சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற எமது யோசனையை சந்திரிகா அரசு ஏற்க மறுத்தது. போருக்கு ஓய்வு கொடுக்கவோ, நில ஆக்கிரமிப்பை நிறுத்தவோ, பொருளாதாரத் தடைகளை நீக்கவோ சந்திரிகா விரும்பவில்லை. போரையும் பொருளாதாரத் தடைகளையும் தமிழர் மீதான அரசியல் அழுத்தங்களாகப்பாவிக்கவே அரசு விரும்பியது. சமாதானத்திற்கான போர்| என்ற சந்திரிகா அரசின் கோட்பாடு ஒரு இராணுவத் தீர்வையே குறித்து நிற்கிறது. போர் மூலமாக தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, புலிகள் இயக்கத்தை தோற்கடித்து, தமிழினத்தை அடிமை கொள்வதே இத்திட்டமாகும். கடந்த ஐந்தாண்டு காலமாக இப்போர்த்திட்டத்தை செயற்படுத்தவே அவர் ஓயாது உழைத்தார். எத்தனையோ பேரழிவுகளைச் சந்தித்த போதும் அவர் தனது இராணுவத் தீர்வுத்திட்டத்தை கைவிடவில்லை. இதனால் சமாதான வழிமுறைகள் பற்றியோ, சமாதானப் பேச்சுக்கள் பற்றியோ அவர் அக்கறையோடு சிந்திக்கவில்லை. அதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை.

போரைத் தொடர்ந்து நடத்தியவாறு, சில வரையறைகளுடன், இரகசியமாக பேச்சுக்களை நடத்தலாமென மூன்றாம் தரப்பு மூலமாக சந்திரிகா எமக்கு தூது அனுப்பியிருந்தார். நாம் அந்த யோசனையை ஏற்றுக்கொள்வில்லை. ஒரு புறம் போரை நடத்திக்கொண்டு, மறுபுறம் சமாதானப் பேச்சை நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது. அத்தோடு அபத்தமானதும் கூட. தொடரும் போரினால் எமது மக்கள் சாவையும், அழிவையும், அவலங்களையும் சந்தித்து நிற்க நாம் எதிரியோடு கைகோர்த்து சமாசம் பேசுவது முடியாத காரியம். அத்துடன் எந்தவொரு நிபந்தனையோடும், காலவரையோடும் பேச்சுக்களை நடத்த நாம் தயாராக இல்லை. சந்திரிகா உண்மையில் சமாதானத்திற்காக அன்புக்கரம் நீட்டவில்லை. பேச்சு என்றபோர்வையில் ஒரு பொறியை வைக்க முயன்றார். நாம் அந்த சமாதானப்பொறிக்குள் சறுக்கிவிழத்தயாராகஇல்லை. கடலோரம் கட்டிய மண்வீட்டுக்கு நிகழ்ந்த கதிபோல சந்திரிகாவின் போர்த்திட்டத்தை விடுதலைப்புலிகளின் ஷஓயாத அலைகள்| அடித்துச் சென்றுள்ளது. இச்சமரில் நாம் ஈட்டிய மாபெரும் வெற்றியின் விளைவாக இராணுவ சமபலம் எமக்குச் சார்பாகத் திரும்பியிருக்கிறது. புலிகள்இயக்கத்தைப்பலவீனப்படுத்தி, இராணுவ மேலாதிக்க நிலையைப் பெற்றுவிடவேண்டுமென்ற சந்திரிகாவின் ஐந்தாண்டு கால பகீரத முயற்சியை நாம் ஒரு சில நாட்களில் முறியடித்துள்ளோம்.

ஆட்பலம், ஆயுதபலம், ஆன்மபலம், மக்கள் பலம் என்ற ரீதியில் சகல பலத்தோடும் நாம் வலுப்பெற்று நின்றபோதும், எமது தாயகத்தை மீட்டெடுக்கும் போரியல் சக்தி எம்மிடம் இருந்த போதும், நாம் சமாதானப் பாதையைக் கைவிடவில்லை. உயிரழிவையும், இரத்தக் களரியையும் தவிர்த்து, சமாதான வழியில், நாகரீகமான முறையில், தமிழரின் சிக்கலைத் தீர்க்கவே நாம் விரும்புகிறோம். சமாதானப் பேச்சுக்கள் ஒரு சமாதான நல்லெண்ணப் புறநிலையில் மூன்றாம் தரப்பு சர்வதேச மத்தியத்துவத்துடன் நடைபெற வேண்டும். என்பதையே நாம்மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். சமாதானப் புறநிலை எனும்பொழுது போர் ஓய்ந்து, பொருளாதாரத் தடைகள் அகன்று, எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் படைகள் விலகிய ஒரு இயல்பு நிலையையே நாம் குறிக்கிறோம். போரையும், நில ஆக்கிரமிப்பையும், பொருளாதார நெருக்குவாரங்களையும் தமிழர் மீது அழுத்தம் செலுத்தும் உத்திகளாகப் பாவிப்பிதை நாம் அனுமதிக்க முடியாது. எவ்வித புறநிலை அழுத்தங்களும் இல்லாத இயல்புநிலையில் சமத்துவமும், புரிந்துணர்வும் நிலவும் நல்லெண்ண சூழ்நிலையில் பேசுவதையே நாம் விரும்புகிறோம்.

நாம் பேச்சுக்கான கதவை திறந்தபடி சிங்கள தேசத்திற்கு ஒரு நல்லெண்ண சமிக்கையைக் காட்டுகிறோம். ஆயினும் நாம் வேண்டுவது போன்று ஒரு சமாதான சூற்நிலையை தோற்றுவிப்பதற்கு சிங்கள அரசியற் தலைமைகள் இணங்கப்போவதில்லை என்பது எமக்குத் தெரியும். நீண்ட காலமாக கடைப்பிடித்துவரும் இராணுவ வன்முறைப்பாதையை சிங்கள இனவாதிகள் இலகுவில் கைவிடப்போவதில்லை என்பதும் எமக்குத் தெரியும். எனவே, எமது தேசிய சிக்கலுக்கு தீர்வுகாணலாமென நாம் கற்பனையில் வாழவில்லை.

மனித உரிமைகளை மதியாத சிங்கள இனவாத அரசியலும், அதன் தமிழர் விரோதப் போக்கும் தமிழ்மக்களுக்கு ஓரோயொரு மாற்று வழியையே திறந்து வைத்திருக்கிறது. அதுதான் போராடிப் பிரிந்துசென்று தனியரசை உருவாக்கும் ஒரே வழி. இந்த வழியில் தான் சிங்கள தேசம் தமிழினத்தை தள்ளிக்கொண்டிருக்கிறது. சுதந்திர தமிழீழத் தனியரசே எமது தேசியப் பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதை எமது மக்கள் எப்பொழுதோ தீர்மானித்து விட்டார்கள். எமது மக்களின் சுதந்திர அபிலாசையை சிலுவையாக தோளில் சுமந்து இத்தனை ஆண்டுகளாக எமது இயக்கம் இரத்தம் சிந்திப் போராடி வருகிறது. இன்று, எமது சுதந்திரப் பயணத்தில், அந்த நீண்ட விடுதலை வரலாற்றில், ஒரு முக்கியமான திருப்பத்தை அடைந்துவிட்டோம். எமது போராட்ட இலக்கு, ஒளிமயமான எதிர்காலமாக, எமது கண்களுக்குத் தெரிகிறது. நாம் நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம். எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து நாம் நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்து செல்வோம். நாம் ஒரே மக்கள் சத்தியாக, ஒன்றுபட்ட தேசமாக, ஒருமித்தெழுந்து, எமது இலட்சியப் பாதையில் விரைந்து செல்வோம். சாவைத் தழுவிய எமது வீரர்களின் ஆன்மாவாக சுதந்திரம் எமக்காக காத்துநிற்கிறது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்||

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

ஈழத்துக்கானவை

Facebook

 Strict Standards: Non-static method kdfblikebox::getinput() should not be called statically in /storage/content/30/1006530/eelam.fm/public_html/modules/mod_kd_facebooklikebox/mod_kd_facebooklikebox.php on line 14 

Thagavalkal

Copyright © 2019. EFL Media Centre Rights Reserved.


Facebook flicker youtube